அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு...பல்வேறு மாநிலங்களில் போலீசார் உஷார் நிலை!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பாரத் பந்த்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ள நிலையில், மாநிலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு  தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு...பல்வேறு மாநிலங்களில் போலீசார் உஷார் நிலை!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதன் எதிரொலியாக பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக பீகார் மாநிலம் பாட்னாவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சில அமைப்புகள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் எனும் தகவலால், வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தலைநகர் டெல்லியில் போராட்டக்காரர்கள் கூடுவார்கள் என்பதால், மாநில எல்லையில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் டெல்லி எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதால், டெல்லி - நொய்டா மற்றும் குர்கான் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில் நிலையத்தில், போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், முள்வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்புள்ளது. இருப்பினும் சில அமைப்புகள் போராட்டம் நடத்தக்கூடும் எனும் எச்சரிக்கையால்,  போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.