இன்று தொடங்குகிறது காவிாி ஒழுங்காற்று குழு கூட்டம்!!

காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசு மறுத்துள்ள நிலையில், ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று மீண்டும் நடைபெறவுள்ளது.

காவிாியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீா் திறந்து விடக்கோாி கா்நாடக அரசுக்கு தமிழ்நாடு அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் கா்நாடக அரசு தண்ணீா் வழங்க தொடா்ந்து மறுத்து வருகிறது. கடந்த செப்டம்பர் 29- ம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், காவிரியில் தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு மூவாயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

எனினும், தங்களது அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் நீர் திறக்க முடியாது என்றும், விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடகா அரசு மனு அளித்துள்ளது. இந்த சூழ்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 88-வது கூட்டத்திற்கு அதன் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார்.

காணொலி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், தலைமை பொறியாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். 

கூட்டத்தில் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விட்டுள்ளதா? என்பது பற்றி விவாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.