தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீர் கிடைக்குமா.? டெல்லியில் கூடிய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்.! 

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீர் கிடைக்குமா.? டெல்லியில் கூடிய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்.! 

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீர் பங்கீடு குறித்து விவாதிக்க, டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது.

தமிழகத்தின் தேவைக்காக ஆண்டுதோறும் 177 புள்ளி 2 டி.எம்.சி காவிரி நீரை வழங்க வேண்டும் என, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாதந்தோறும் தமிழகத்திக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு ஜூன் மாதம் 9. 19 டி.எம்.சி.யும் ஜூலை மாதம் 31. 24 டி.எம்.சி. யும் காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் என, சமீபத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

நடப்பு மாதத்திற்கான ஒதுக்கீட்டில் இதுவரை ஒரு டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தமிழகம் வந்துள்ள சூழலில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 12-வது கூட்டம், டெல்லியில் மத்திய நீர்வள ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் தொடங்கியது. காணொலி வாயிலாக நடைபெற்று வரும் கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழிற்நுட்பப்பிரிவு தலைவர் சுப்ரமணியன் பங்கேற்றுள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீர் குறித்தும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம்-கர்நாடகா இடையே நீடிக்கும் பிரச்சனை குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு மாநில அணைகளிலும் உள்ள நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்து, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.