தமிழக காவலர்களுக்கு சிறந்த புலனாய்வுக்கான மத்திய அரசு விருது அறிவிப்பு!  

தமிழக காவல் துறையைச் சோ்ந்த 4 பெண் காவல் ஆய்வாளா்கள் உள்பட 8 ஆய்வாளர்களுக்கு சிறந்த புலனாய்வுக்கான மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவலர்களுக்கு சிறந்த புலனாய்வுக்கான மத்திய அரசு விருது அறிவிப்பு!   

மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் காவல் துறையில் சிறப்பாக புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு, சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்களை வழங்கி கெளரவித்து வருகிறது. இந்த விருது காவல் துறை அதிகாரிகளின் புலனாய்வுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.  இந்தாண்டுக்கான இந்த விருது மத்திய உள்துறை அமைச்சகத்தால் சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை, போதை பொருள் தடுப்பு பிரிவு உட்பட அனைத்து மாநில காவல் துறையில் 152 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் தமிழக காவல் துறையில் பணிபுரியும் 8 ஆய்வாளர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெண் காவல் ஆய்வாளர்களான அன்பரசி, கவிதா, கலைச்செல்வி, கண்மணி மற்றும் சிதம்பர முருகேசன், மணிவண்ணன், ஜெயவேல், சரவணன் ஆகிய எட்டு பேரும் சிறந்த புலனாய்வுக்கான விருது பெறுகின்றனர்.

குறிப்பாக தற்போது மயிலாப்பூர் காவல் மாவட்ட நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளரான மணிவண்ணன் கடந்த 2014 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய போது தனியார் லாட்ஜ்  ஒன்றில் முகமது இக்பால் என்பவரை சுத்தியால் தாக்கிய சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் துப்பு கிடைக்காமல் குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல் நீடித்தது. அப்போது இந்த வழக்கை மணிவண்ணன்  திறமையாக கையாண்டு தொழில் போட்டியின் காரணமாக கொலை நடந்ததை கண்டறிந்து அமித் ஆம்ஜா மற்றும் கோபி நாத் ஆகியோரை கைது செய்தார்.

பின்னர் மணிவண்ணன் வேறு காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மீண்டும் 2020 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு வரும் போது இந்த வழக்கின் ஆதாரங்களை துரிதமாக திரட்டி இரு குற்றவாளிகளுக்கும் 10ஆண்டுகள் சிறை, 3 லட்சம் அபராத தொகை அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதே போல் 1998ஆம் ஆண்டு முதல் 2011 வரை கியூ பிரிவில் பணியாற்றிய போது தமிழ் தேசிய மீட்புப்படையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரிடம் கைது செய்யவும், அவரிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றவும் உதவியாக இருந்துள்ளார். தமிழ்நாடு விடுதலை படை தலைவர் மாறனை கைது செய்தார். சிறப்பாக புலனாய்வு செய்த மணிவண்ணனுக்கு மெச்சத்தகுந்த விருதை மத்திய அரசு அளித்துள்ளது. அதே போல் பூந்தமல்லி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிப்புரிந்து வந்த சிதம்பர முருகேசன் வேப்பேரி காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு காவல் ஆய்வாளராக பணியாற்றினார். அப்போது கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த நபர்களை சிறப்பாக புலனாய்வு செய்து உடனடியாக கைது செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் படி சிறப்பாக பணிப்புரிந்தார். சிறப்பாக பணிப்புரிந்ததற்காக முருகேசனுக்கு மெச்ச தகுந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அதே போல் காவல் ஆய்வாளர் அன்பரசி போக்சோ வழக்கை சிறப்பாக துப்புத்துலக்கியதற்காகவும், கவிதா கொலை வழக்கை சிறப்பாக கையாண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கியதற்காக மெச்சத்தகுந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.