முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்.. மகிளா காங்கிரசார் சாலையில் திரண்டு போராட்டம்!!

கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயனை பதவி விலக வலியுறுத்தி மகிளா காங்கிரசார் போராட்டம் நடத்தியுள்ளனர்.

முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்.. மகிளா காங்கிரசார் சாலையில் திரண்டு போராட்டம்!!

வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில், தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் கடந்த 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அவர் மீது உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ போலீசார் வழக்கு பதிந்து இருந்த நிலையில் அண்மையில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே, சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்வப்னா சுரேஷ், வழக்கு தொடர்பாக பல உண்மைகளை கூறியுள்ளார். அதில் முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்கும் தொடர்பு உள்ளதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார். அதேவேளையில் இந்த குற்றச்சாட்டை மறுத்த பினராயி விஜயன், தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன்  பொய் புகார் கூறப்படுவதாக தெரிவித்தார்.

இந்தநிலையில் ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலத்தை முக்கிய அஸ்திரமாக எடுத்துக்கொண்ட காங்கிரசார் பினராயி விஜயனை பதவி விலக வலியுறுத்தி போராடி வருகின்றன.  திருவனந்தபுரத்தில்  கட்சி கொடியுடன் திரண்டு கோஷங்களை எழுப்பிய மகிளா காங்கிரசார், மற்றும் இளைஞர் காங்கிரசாரை போலீசார் தண்ணீர் பீய்ச்சியடித்து அப்புறப்படுத்த முயன்றதால் பரபரப்பு நிலவியது.