ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய விசாரணை குழு அமைத்தது மத்திய அரசு!

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய விசாரணை குழு அமைத்தது மத்திய அரசு!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கும் அனைத்து மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் எண்ணம் குறித்து பல ஆண்டுகளாக மத்திய அரசு கருத்து தெரிவித்து  வருகிறது. ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தினால் செலவுகள் குறையும் என்பதே இதற்கு முதல் காரணமாக கூறப்படுகிறது.

ஆனால், இவ்வாறாக தேர்தல் நடத்தினால் செலவுகள் அடிப்படையில் தேசியக் கட்சியை எதிர் கொள்ள முடியாது என்றும், ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெறும் போது உள்ளூர் பிரச்சினைகள் கவனம் பெறாமல் போய்விடும் என்றும் கூறி மாநிலக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், நடப்பாண்டு நவம்பரில் ஐந்து மாநில சட்டசபைகளுக்கும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நாடாளுமன்றத்திற்கும் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இன்னும் சில மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளன.

இதையும் படிக்க : தொகுப்பூதியத் தூய்மைப் பணியாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு அரசு...!

இதற்கிடையே,  ஒரே நாடு  ஒரே தேர்தலில் உள்ள சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும், இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேறி நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில தேர்தல் நடைபெற்றால் தமிழ்நாட்டில் திமுக அரசு, மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் அரசு, கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் கலைக்கப்படும்.

மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திமுக சார்பில் மத்திய சட்ட ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

எனினும் மத்திய அரசின் இந்த நகர்வால் வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது.