ரஷ்யாவில் கைதான ஐஎஸ் பயங்கரவாதி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்...!

ரஷ்யாவில் கைதான ஐஎஸ் பயங்கரவாதி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்...!

இந்தியாவில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்த ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தாக்குதலுக்கு இந்தியாவில் உதவிக்கு ஆட்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் கைது:

ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மத்திய ஆசிய பகுதியில் உள்ள நாட்டை சேர்ந்தவர் எனவும் ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.  அவர் மனித வெடிகுண்டாக செயல்பட திட்டமிட்டிருந்தார் எனவும் அந்த அமைப்பு இந்திய ஆணையத்திற்கு அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கிடைத்த தகவலின் படி, கைது செய்யப்பட்ட மனித வெடிகுண்டு மனிதரின் பெயர் அஸ்மவ் என்பது தெரியவந்தது.

மேலும் படிக்க: https://malaimurasu.com/posts/india/Human-bomb-for-india-selection-by-telegram-what-is-the-background

ரஷ்யா வெளியிட்ட வீடியோ:

இதனைத்தொடர்ந்து ரஷ்ய உளவு அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் அந்த நபர், தான் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மஷ்ரப்கோன் அசமோவ் என்றும் துருக்கியில் பயிற்சி பெற்ற தான் தற்போது இந்தியா சென்று தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாகவும் அதற்கான உதவிகள் இந்தியாவில் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். 

அறிக்கை:

இதனைத் தொடர்ந்து ரஷ்ய உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதி சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த விவகாரத்தில் ஆளும் பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவரைக் கொல்வதற்காகவே சம்பந்தப்பட்ட நபர் இந்தியாவுக்குள் வர இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவிற்குள் எளிதாக நுழைந்து விடலாம் என்பதற்காகவே அவர் ரஷ்யாவைத் தேர்ந்தெடுத்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.