ஆங்கில புத்தாண்டை வரவேற்ற உலக நாடுகள்... 2022 ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக அமைய பிரார்த்தனை

இந்தியா முழுவதும் ஆங்கில புத்தாண்டு தினத்தை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

ஆங்கில புத்தாண்டை வரவேற்ற உலக நாடுகள்... 2022 ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக அமைய பிரார்த்தனை

2022 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு உலக நாடுகளில் வான வேடிக்கைகளுடன், அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புத்தாண்டு தினத்தன்று பொது மக்கள் வழக்கமாக கூடும் இடங்களில், இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பல்வேறு மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. வழக்கமான கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு இல்லை என்றாலும், 2022 ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக அமைய வேண்டும் என அமைதியான முறையில் மக்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் பாட்டு, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.  புத்தாண்டை முன்னிட்டு கேக் வெட்டி, ஆடல் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தேவாலயங்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சில கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.  

தலைநகர் புதுடெல்லியில் இரவு 10 மணிக்கு மேல் சாலைகளில் சுற்றி திரிந்த மக்களை வீடுகளுக்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.  உணவு விடுதிகள் இரவு 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டன. சந்தை பகுதி இரவு 8 மணியுடன் மூடப்பட்டது. இதனிடையே, டெல்லியின் நாடாளுமன்ற கட்டிடம்,  மத்திய அமைச்சகங்கள் அமைந்துள்ள பகுதி உள்ளிட்டவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

புத்தாண்டை வரவேற்கும் விதமாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு பகுதியில்  பார்வையாளர்களை கவரும் வகையில் ஒளி ஒலி மற்றும் லேசர் காட்சிகள் நடத்தப்பட்டன. மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கொல்கத்தாவின் பார்க் தெரு பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி மக்கள் கூட்டம் காணப்பட்டது. குஜராத் மாநிலம் கட் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் ஆடி பாடி புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இதேபோல் ஜம்முகாஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் உள்ள ராணுவ முகாமிகளில் எல்லைப் பாதுகாப்பு படையினர் பங்கேற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.