டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் சட்டம்: ஆம் ஆத்மிக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு!

டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் சட்டம்: ஆம் ஆத்மிக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு!

டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் மத்திய அரசின் அவசர சட்டம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துப் பேசியுள்ளார். 

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில ஆட்சிக்கும், அங்கு துணைநிலை ஆளுநராக இருக்கும் வினய் சக்சேனாவுக்கும் இடையில் நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தப் பிரச்சனை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் பூதாகரமாக வெடித்தது. இந்த விவகாரத்தையடுத்து, மாநில நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், "டெல்லியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே முழு அதிகாரம் இருப்பதாகவும்,  அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகி விடும்” என்று தீர்ப்பளித்தது. Image

இந்த தீர்ப்பு வெளியான சில மணி நேரத்திலேயே, டெல்லி மாநில சேவைகள் துறைச் செயலாளர் ஆஷிஷ் மோரை இடமாற்றம் செய்து அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். ஆனால், அதற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அத்துடன், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையே நீர்த்துப்போகச் செய்யும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றையும் கொண்டுவந்தது. அந்த சட்டத்தில், ”பணி நியமனம், இடமாற்றம் தொடர்பாக முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.  பெரும்பான்மை முடிவின்படி பணி நியமனம் மற்றும் இடமாற்றம் முடிவுகள் இருக்கும் என்றும், அப்படி ஒருவேளை இந்த குழுவில் ஒருமித்த முடிவு ஏற்படாவிட்டால் துணைநிலை ஆளுநர் எடுக்கும் முடிவே இறுதியானது” எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவரும் உடனடியாக ஒப்புதல் வழங்கியதால், இந்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, இந்த சட்டத்தை நிரந்தரச் சட்டமாகக் கொண்டுவர பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.Image

இந்த சட்டத்தால் அதிர்ச்சியடைந்துள்ள ஆம் ஆத்மி கட்சி, அவசரச் சட்டத்தை கறுப்புச் சட்டம் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அத்துடன், மக்களவையில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மையுடன் இருப்பதால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் உதவியோடு அதை தோற்கடிக்க அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டு பாஜக அல்லாத கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவைக் கோரி வருகிறார். அதன்படி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரைச் சந்தித்து ஆதரவு கோரியிருக்கிறார். Image

இந்நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துப் பேசியுள்ளார். இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சிக்கு இப்பிரச்சனையில் ஆதரவு தெரிவிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.