டெல்லி அவசர சட்டம்: சாசன அமர்வுக்கு பரிந்துரை..!

டெல்லி அவசர சட்டம்:  சாசன அமர்வுக்கு பரிந்துரை..!

டெல்லி அவசர சட்டத்தை எதிர்த்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

மாநில அரசின் அதிகாரத்தை மீறி அதிகாரிகள் நியமனத்தில் தலையிடும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததன் எதிரொலியாக, ஓய்வு பெற்ற நீதிபதி சங்கீத் ராஜ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி அரசான  ஆளும் ஆம்ஆத்மி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது, நியமனம் தொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநரும் முதலமைச்சரும் ஒன்றாக அமர்ந்து அரசியலுக்கு அப்பாற்பட்டு கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி, அந்த வழக்கு மீதான விசாரணை  20-ம் தேதியான இன்று ஒத்திவைக்கப்பட்டது. 

இன்னிலையில், இன்று இந்த வழக்கின் மீதான  விசாரணையின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களை இச்சட்டம் நீர்த்துப் போகச் செய்வதாக அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. சட்ட விரோத நியமனங்களுக்கு டெல்லி உத்தரவிட்டதாக மத்திய  அரசு சார்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.

இது ஒருபுறமிருக்க, இன்று நடைபெறும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசின் சார்பாக சில சட்டமசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.  அதில், முதல் மசோதாவாக, டெல்லி அவசர சட்டத்திருத்தம் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

ஏற்கனவே, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி இந்த அவசர சட்டத்தின் செயல்பாடுகளை எதிர்க்க, மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் ஆதரவை நாடியிருக்கும் இந்த சூழலில்,  இந்த மசோதாவை பாராளுமன்ற கூட்டத்தொடரில் தற்போது, மத்திய அரசு அதனை சட்டமாக்க  முன்மொழிய இருப்பது, மத்திய அரசு தனது அதிகாரத்தை நிலைநாட்ட எடுத்திருக்கும் தீவிரமான முயற்சி என்றே பார்க்கப்படுகிறது. இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் சில அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

இதையும் படிக்க    | மணிப்பூர் விவகாரம்: "கூசாமல் பொய் பேசிய பிரதமர் மோடி" சீமான் காட்டம்!