மோசடி தொழிலதிபர்களின் சொத்துக்கள்... பொதுத்துறைக்கு மாற்றிய அமலாக்கத்துறை...

நீரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி உள்ளிட்ட தொழிலதிபர்கள் வங்கி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, 8 ஆயிரத்து 441 கோடி மதிப்பிலான சொத்துக்களை பொதுத்துறை வங்கிகளின் பெயருக்கு மாற்றம் செய்து அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மோசடி தொழிலதிபர்களின் சொத்துக்கள்... பொதுத்துறைக்கு மாற்றிய அமலாக்கத்துறை...
இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி உள்ளிட்ட தொழிலதிபர்கள் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் இந்திய வங்கிகளுக்கு சுமார் 22 ஆயிரத்து 585 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த வங்கி கடன் மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. 
 
இதுதொடர்பாக அமலாக்க இயக்குநரகம் வழக்கு பதிவு செய்து வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள தொழிலதிபர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடி நடவடிக்கையின் பலனாக தப்பியோடிய தொழிலதிபர்களின் சுமார் 18 ஆயிரத்து 170 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதில் 969 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வெளிநாடுகளில் உள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் முடக்கப்பட்ட சொத்துக்களில் சுமார் 8 ஆயிரத்து 441 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பொதுத்துறை வங்களின்  பெயருக்கு மாற்றம் செய்து அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கெனவே அந்நிறுவனங்களுக்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் ஆயிரத்து 357 கோடி ரூபாய் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த இழப்பில் சுமார் 9 ஆயிரத்து 41 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் இது மொத்த இழப்புகளில் 40 சதவீதம் ஆகும் எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.