அசாமில் 3வது நாளாக தொடரும் கனமழையால் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை! வெள்ள பாதிப்புக்கு இதுவரை 44 பேர் பலி!!

அசாம் மாநிலத்தில் பொழிந்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 44 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அசாமில்  3வது நாளாக தொடரும் கனமழையால்  'ரெட் அலர்ட்'  எச்சரிக்கை! வெள்ள பாதிப்புக்கு இதுவரை 44 பேர் பலி!!

அசாம் மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில்,  தொடர்ந்து 3-வது நாளாக பல்வேறு பகுதிகளில் பெரு மழை பொழிந்து வருகிறது. அசாம் மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்'  எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கவுகாத்தியில் 3-வது நாளாக பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் இடைவிடாத கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அப்பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர், படகுகளைப் பயன்படுத்தி, அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். 

கோல்ப்ரா மாவட்டத்தில் ஹுசைன் அலி என்னும் பகுதியில் ஏற்பட்ட கனமழையால் வீடு இடிந்து விழுந்து 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர். இதனால் அசாம் மாநிலத்தில் கனமழை வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. அசாம் முழுவதும் கிட்டதட்ட 18 மாவட்டங்களில் கன மழை கொட்டி வருவதாகவும், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கி கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பலசாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கனமழையால் பிரம்மபுத்திரா மற்றும் மனாஸ் ஆறுகளில் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.