கேரளாவில் இடைவிடாமல் பெய்யும் கனமழை... இதுவரை 5 பேர் உயிரிழப்பு... 12 பேரை காணவில்லை...

கேரளாவில் இடைவிடாமல் பெய்யும் கனமழைக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று, ராணுவம் மற்றும் விமானப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் இடைவிடாமல் பெய்யும் கனமழை... இதுவரை 5 பேர் உயிரிழப்பு... 12 பேரை காணவில்லை...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு, பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கிய அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால், பத்தனம்திட்டாவில் உள்ள மணியார் அணையின் ஷட்டர்கள் திறக்கப்பட்டு, அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிக மோசமான வானிலையுடன் கனமழை முதல் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் வேண்டுகோளை அடுத்து, ராணுவம் மற்றும் விமானப்படையினர் மீட்பு பணிக்காக களம் இறங்கியுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் தெற்கு ஏர் கமாண்டின் கீழ் உள்ள அனைத்து விமான தளங்களும் தயார் நிலையில் உள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிக்காக ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். பாங்கோடு ராணுவ முகாமில் இருந்து வீரர்கள் அடங்கிய குழு, காஞ்சிரப்பள்ளிக்கு விரைந்துள்ளது.

இதனிடையே, கோட்டயம் நகரின் பூஞ்சார் கிராமத்தில் சென்ற அரசு பேருந்து, வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்டது. இருப்பினும் உயிர் சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதியளவு பேருந்து மூழ்கிய நிலையில், அதில் இருந்த பயணிகள் அனைவரும் ஜன்னல் வழியாக மீட்கப்பட்டுள்ளனர்.