48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிவுகள் வெளியானது...ஏதேனும் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதா?

48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிவுகள் வெளியானது...ஏதேனும் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதா?

ஜிஎஸ்டி வரி முறைகேடுகளில் அரசு ஊழியர்கள் மீது குற்ற வழக்கு தொடர்வதற்கான வரித் தொகையின் வரம்பை ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடி ரூபாயாக அதிகரித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட 8 அம்சங்கள்: 

ஜிஎஸ்டி கவுன்சில் குழுவின் 48 ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலங்களின் நிதியமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் கலந்து கோண்டனர். கூட்டம் முடிந்த பிறகு அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய நிர்மலா சீதாராமன், இந்த கூட்டத்தில் எட்டு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறினார். எனினும் கவுன்சில் குழு உறுப்பினர்கள் பரிந்துரைத்த புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் மீது வரிவிதிப்பது மற்றும் ஜிஎஸ்டி தீர்ப்பாயம் அமைப்பது குறித்தும் விவாதிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: சொன்னதை செய்த ஓபிஎஸ்...சூடுபிடிக்கும் அரசியல்...அப்போ விரைவில் அதுவும் நடக்கும்?

நிதி வரம்பு 2 கோடியாக உயர்வு:

தொடர்ந்து பேசிய மத்திய வருவாய்த் துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா, ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் அரசு ஊழியரை கடமையை செய்யவிடாமல் தடுப்பது இனி குற்றமாக கருதப்படாது என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் ஜிஎஸ்டி வரி முறைகேடுகளில் அரசு ஊழியர்கள் மீது குற்ற வழக்கு தொடர நிதி வரம்பை 2 கோடி ரூபாயாக உயர்த்தியது, போலி ரசீதுகள் தொடர்பான முறைகேடுகளுக்குப் பொருந்தாது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, பருப்பு வகைகளுக்கு 5 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரியை நீக்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

இந்த 48வது ஜிஎஸ்டி கூட்டத்தை பொறுத்தவரை எந்தப் பொருட்கள் மீதும் புதிய வரி விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.