பிரதமர் மோடியை தான் 30 நிமிடங்கள் காக்க வைக்கவில்லை.....மத்திய அரசுக்கு முதல்வர் மம்தா பதிலடி

பிரதமர் நரேந்திர மோடியை தான் 30 நிமிடங்கள் காக்க வைத்ததாக போலியான செய்திகளை வெளியிட்டு தன்னை இழிவுபடுத்த வேண்டாம் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மத்திய அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடியை  தான் 30 நிமிடங்கள் காக்க வைக்கவில்லை.....மத்திய அரசுக்கு முதல்வர் மம்தா  பதிலடி

மேற்குவங்கத்தில் யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். பின்னர் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளாமல் புயல் சேதம் குறித்த அறிக்கையை மட்டும் பிரதமரிடம் அளித்து விட்டு புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளிவந்தன.

பிரதமர் மோடி வந்திறங்கிய விமான தளத்தில், மம்தா பானர்ஜி அவரை சந்தித்து 15 நிமிடங்கள் உரையாடியதாகவும், புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடியின் அருகே மம்தா பானர்ஜிக்காக போடப்பட்ட இருக்கை காலியாக இருக்கும் படமும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வு சர்ச்சையானதை தொடர்ந்து மம்தா மத்திய அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் நடந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த மம்தா பானர்ஜி, பிரதமருடனான கூட்டம் முன்னரே ஏற்பாடு செய்யவில்லை எனவும், தன்னை இழிவுபடுத்த வேண்டும் எனவும் கூறினார். 

மேலும் மத்திய அரசு ஒரு தலைபட்சமாக செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். பிரதமர் மோடியை தான் 30 நிமிடங்கள் காத்திருக்க வைக்கவில்லை எனவும், பிரதமரின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற போது தானும், தலைமைச் செயலாளரும் 20 நிமிடங்கள் காக்க வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.


அது மட்டுமின்றி மேற்குவங்க மக்களின் நலனுக்காக பிரதமர் தன் காலில் விழும்படி கூறினாலும்,அதை செய்ய தாம் தயாராக இருப்பதாகவும் மம்தா உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.