"தெருநாய்கள் தாக்கினால் அதற்கு உணவளிப்பவர்கள் தான் பொறுப்பு..." - உச்சநீதிமன்றம்

"தெருநாய்கள் தாக்கினால் அதற்கு உணவளிப்பவர்கள் தான் பொறுப்பு..." - உச்சநீதிமன்றம்

தெருநாய்களுக்குத் தொடர்ந்து உணவளிக்கும் நபர்களே, அந்த விலங்குகள் மக்களைத் தாக்கினால் ஏற்படும் செலவையும் ஏற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று கூறியுள்ளது 

2019 ம் ஆண்டு முதல் இந்தியாவில் 1.5 கோடி விலங்குகள் கடித்த வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிலும் அதிக வழக்குகள் பதிவானது உத்திர பிரதேசத்தில், அடுத்தபடியாக தமிழகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் உள்ளது. 2019 ஆம் ஆண்டில் 72,77,523 விலங்கு கடி வழக்குகள் இருந்தன. இது 2020 இல் 46,33,493 ஆக குறைந்துள்ளது. இருப்பினும், 2022 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும், 14.5 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில், கேரளாவில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் ஜே.கே. மகேஸ்வரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தெருநாய்களுக்குத் தொடர்ந்து உணவளிக்கும் நபர்களே தடுப்பூசி போடுவதற்கும்  பொறுப்பாவார்கள் எனவும், மேலும் அந்த விலங்குகள் மக்களைத் தாக்கினால் அதற்கான செலவையும் அவர்களே ஏற்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் நேற்று கூறியுள்ளது 

அதுமட்டுமின்றி தெருநாய்களின் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண்பது அவசியம் என்றும், தெருநாய்களுக்கு உணவளிக்கும் மக்களிடையே சமநிலையை ஏற்படுத்துவது அவசியம் என்றும், தெருநாய்களால் தாக்கப்படாமல் அப்பாவி மக்களைப் பாதுகாப்பது அவசியம் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மக்கள் விரும்பினால் நாய்களை கவனித்துக்கொள்ளட்டும், ஆனால் அவை குறிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். தெருநாய் பிரச்சினைக்கு தீர்வு காண பகுத்தறிவு தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கை செப்டம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.