15 ஆண்டுகளில் இந்தியா உலகின் வழிகாட்டியாக மாறும்...!! மத்திய அமைச்சர்...!!

15 ஆண்டுகளில் இந்தியா உலகின் வழிகாட்டியாக மாறும்...!! மத்திய அமைச்சர்...!!

இன்னும் 15 ஆண்டுகளில் இந்தியா உலகின் வழிகாட்டியாக மாறும் என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன் ராவ் கரட் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமத்தின் (தமிழ்நாடு) கிரெடிட் அவுட்ரீச் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன் ராவ் கரட் பங்கேற்று பல்வேறு வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.

 பின்னர் பேசிய பகவத் கிஷன்ராவ் கரட், பிரதமர் தலைமையில் நமது நாடு வேகமாக வளர்ந்து வருவதாகவும் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது கொரோனாக்குப் பிறகு நமது பொருளாதாரம் அமெரிக்கா மற்றும் சீனாவை விட வேகமாக முன்னேறி வருவதாகவும் பெருமிதத்துடன் கூறினார். அதற்குக் காரணமாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சுட்டிக்காட்டிய அவர், நிர்மலா சீதாராமன் இந்தியாவை ஆத்ம நிர்பாராக மாற்றுவதற்கான பல்வேறு திட்டங்களுக்கு சுமார் 20 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக குறிப்பிட்டார்.  

மேலும், 150 ஆண்டுகளாக இந்தியாவை கைப்பற்றி இருந்த இங்கிலாந்தை விட நாம் முன்னேறி விட்டதாகவும் நம் பொருளாதாரம் இங்கிலாந்தை விட அதிகமாக உள்ளதாகவும் கூறினார். மேலும், 2004 முதல் 2014 வரையிலான 10 வருட ஆட்சியில் நமது பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்ததாகவும் ஆனால் கடந்த 9 வருடங்களில் நமது பொருளாதாரம் 10வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து  இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை நாம் கொண்டாடி வருவதாக குறிப்பிட்டு, அடுத்த 25 ஆண்டுகளில்  இந்திய சுதந்திரத்தின் 100 ஆம்  ஆண்டு கொண்டாடப்படும் எனவும், இன்னும் 15 ஆண்டுகளில் இந்தியா உலகின் வழிகாட்டியாக மாறும் எனவும் தெரிவித்தார்.