தலித்துகள், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு... 2019ஆம் ஆண்டை விட 9.4% அதிகரித்துள்ளது...

கொரோனா பேரிடர் காலத்தில், நாட்டில் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள், பெருமளவில் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

தலித்துகள், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு... 2019ஆம் ஆண்டை விட 9.4% அதிகரித்துள்ளது...

கொரோனா பேரிடர் காலத்தில், இந்தியாவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பாதிப்புக்கு உள்ளானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்தாண்டு, மார்ச் மாதம் 25ஆம் தேதி தொடங்கிய 68 நாள் ஊரடங்கு காலத்தில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்தாண்டில் மட்டும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, மொத்தம் 50 ஆயிரத்து 291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இது 2019ஆம் ஆண்டை விட 9 புள்ளி 4 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 25 சதவீத குற்றங்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளதாகவும், இது தொடர்பாக மொத்தம் 12 ஆயிரத்து 714 வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பீகாரில் 7 ஆயிரத்து 368 வழக்குகளும், ராஜஸ்தானில் 7 ஆயிரத்து 17 வழக்குகளும், மத்தியப் பிரதேசத்தில் 6 ஆயிரத்து 899 வழக்குகளும் பதியப்பட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதேசமயம் பழங்குடியின சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் சம்மந்தமாக, மொத்தம் 8 ஆயிரத்து 272 வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாகவும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9 புள்ளி 3 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.