பொதுமக்கள் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு... பயங்கரவாத அனுதாபிகள் கைது...

ஜம்மு காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இருந்ததாக 700-க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

பொதுமக்கள் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு... பயங்கரவாத அனுதாபிகள் கைது...

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த சில நாட்களாகவே பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்துள்ளது. காஷ்மீர் பண்டிதர், சீக்கியர் மற்றும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இருந்ததாக 700-க்கும் மேற்பட்டோரை, பாதுகாப்பு படையினர் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பலர், தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. 

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் இவர்கள் ஸ்ரீநகர், புட்காம் அல்லது தெற்கு காஷ்மீரின் பிற பகுதிகளில் சாதாரண நபர்களை போல வசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அதிகரிக்கும் படுகொலை சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், பயங்கரவாத அனுதாபிகளை கைது செய்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வெற்றியால் உந்தப்பட்டு, பயங்கரவாதிகள் தங்களது தாக்குதலை தொடங்கியுள்ளதாகவும், எளிதாக இருக்கும் நபர்களை குறிவைத்து தாக்குதலை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். தலிபான்கள் வெற்றியை தொடர்ந்து, காஷ்மீர் பகுதியில் தாக்குதல் அதிகரிக்கலாம் என, பலரும் ஏற்கெனவே எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.