ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி... தனிக்கட்சி தொடங்கினார் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி... 

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.

ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி... தனிக்கட்சி தொடங்கினார் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி... 
கடந்த 2009-ல் அப்போதைய ஆந்திர முதலமைச்சராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதனையடுத்து 2011-ல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை தொடங்கிய அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி, தற்போது ஆந்திர முதலமைச்சராக உள்ளார். இந்த நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலுங்கானாவில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். கட்சிக்கு ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
 
தனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாளான ஜூலை 8ஆம் தேதி கட்சியை தொடங்கிவைத்துப் பேசிய ஷர்மிளா, சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி அரசு, தனது வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்துவிட்டதால், தெலுங்கானா மக்களின் கனவுகள் முழுவதும் சிதைந்து விட்டதாக கூறினார்.
 
மேலும், உபரி பட்ஜெட்டைக் கொண்ட மாநிலத்தில், ஏழை குடும்பத்தினர் இன்னும் ரேஷன் கார்டுகள், தங்குமிடம், மருத்துவ வசதி ஆகியவற்றுக்காக காத்திருப்பதாகவும், கடந்த 7 ஆண்டுகளில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் குடும்பம் தவிர, வேறு எந்த குடும்பமும் வறுமையிலிருந்து மீளவில்லை என்றும் கூறிய  ஷர்மிளா, சந்திரசேகர ராவ் குடும்பம் எல்லாவற்றையும் சுரண்டிக்கொண்டு, செல்வச் செழிப்புடன் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.