கார்கில் வெற்றி நாள் இன்று! கோலாகலமாகக் கொண்டாடிய முப்படை!

நாடு முழுவதும் இன்று 23வது கார்கில் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கார்கில் வெற்றி நாள் இன்று!  கோலாகலமாகக் கொண்டாடிய முப்படை!

கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும் உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இன்று 23-வது ஆண்டாக கார்கில் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

இத்தினத்தை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள போர் நினைவு சின்னத்தில் லெப்டினண்ட் ஜெனரல் அருண், முப்படைகளின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

லடாக்கில், நேற்றே இந்தக் கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில், கார்கில் போர் தொடர்பான ஓவியங்களை வரைந்த மாணவர்கள் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து இன்று கார்கில் போர் நினைவிடத்தில் திரண்ட ராணுவ வீரர்கள், மலர் வளையம் வைத்து உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். 
breath

ஜம்முவின், பாலிடன் ஸ்டம்ப் பகுதியில் ராணுவம் சார்பில் நாட்டிற்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் மற்றும் விமானப்படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் விஆர் சவுதாரி ஆகியோர் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர்கள் தூவி, மலர் வளையம் சாற்றி மரியாதை செலுத்தினர்.
 
இதன் ஒரு பகுதியாக ஸ்ரீநகர் லால் சவுக்கின் கண்டா கர் பகுதியிலிருந்து மூவர்ணக் கொடி பேரணியை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று தொடங்கி வைத்தார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதில் கலந்துக் கொண்டு, மலர் வளையம் சாற்றி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.