"ஒன்றிய அரசுக்கு ஓட்டு தான் முக்கியம்" மநீம பொதுச் செயலாளர் அருணாச்சலம் காட்டம்!

"ஒன்றிய அரசுக்கு ஓட்டு தான் முக்கியம்" மநீம பொதுச் செயலாளர் அருணாச்சலம் காட்டம்!

மணிப்பூரில் அமைதி திரும்புவதை விட ஒன்றிய அரசுக்கு ஓட்டு தான் முக்கியம் என மணிப்பூருக்கு சென்று பார்வையிட்டு வந்த மநீம பொதுச் செயலாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார். 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஆட்சியமைக்க மத்திய அரசு தயக்கம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம்,  மணிப்பூரில் நடக்கின்ற அவல நிலைகளை பார்க்கும் பொழுது சுதந்திர இந்தியாவில் தான் நம் இருக்கிறோமா என்று அச்சம் வருகிறது. சுதந்திர இந்தியாவில் இப்படிப்பட்ட ஒரு மாநிலம் இருக்கிறதா என்ற அச்சம் வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு ஒரு மாநில அரசாங்கம் எவ்வாறு இயங்க வேண்டுமோ அவ்வாறு மணிப்பூரில் இயங்கவில்லை. மணிப்பூர் மாநில அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் செயல் இழந்துவிட்டது. பெண்களுக்கு வன்கொடுமை இழைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது கடந்த இரண்டு மூன்று மாதங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  காவல் நிலையத்தில் உள்ள ஆயுதங்களையும் துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள ஆயுதக்கடங்குகளில் உள்ள ஆயுதங்களையும் வன்முறையாளர்கள் எடுத்து செல்லும் அவல நிலை அங்கு இருக்கிறது. சட்ட ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய மணிப்பூர் மாநில காவல்துறை செயல் இழந்துவிட்டது. மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை நிலைநாட்ட மத்திய அரசாங்கம் தயங்குகிறது.  ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கிறது. மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் கூறியது போல உடனடியாக அமைதி திரும்ப வேண்டும் என்றால் முதலாவதாக அங்கு ஜனாதிபதி ஆட்சி உருவாக்க வேண்டும். சுமூகமான சூழ்நிலை உருவாக வேண்டுமென்றால் மாநில ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்

ஒன்றிய அரசுக்கு ஓட்டு தான் முக்கியம்

மேலும், 8 மண்டலங்களிலும் மணிப்பூர் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். கண்டன ஆர்ப்பாட்டத்தோடு நின்று விடப் போவதில்லை அமைதி திரும்பும் வரை எங்களது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.  மக்கள் நீதி மையத் தலைவர் கமலஹாசன் உத்தரவின்படி ஜூலை ஒன்றாம் தேதி மணிப்பூருக்கு நான் சென்றிருந்தேன். மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை அங்கு இருந்தது. விலங்குகளை அடக்கி வைப்பது போல் அடக்கி வைத்துக் கொண்டிருந்தால் நாளைக்கு என்ன ஆகும் என்று அச்சம்தான் எழுகிறது.  பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர தீர்வு உருவாக்க வேண்டும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். ஒன்றிய அரசுக்கு ஓட்டு தான் முக்கியம். மனிதாபிமான ஒரு பொருட்டே இல்லை. எந்த பகுதியில் ஓட்டு அதிகம் உள்ளது என்பதே ஒன்றிய அரசுக்கு முக்கியத்துவம். எல்லா இடங்களிலும் பிளவை ஏற்படுத்தி மக்களை பிரிக்கின்றனர். 

தொடர்ந்து, மணிப்பூருக்கு இந்தியா கூட்டணி சென்றது நல்லதாக பார்க்கிறேன். அதற்கு முன்பே மக்கள் நீதி மையம் சென்று வந்தோம். பிரதமர் மோடி எங்கே சென்றார்? அது தான் மக்களின் கேள்வி. ராகுல்காந்தி சென்றார் அரசியல் நோக்கத்தோடு செல்லவில்லை. அரசியலில் ஆதாயம் அடையவேண்டும் என நினைப்பவர்கள் இன்னும் அங்கு செல்லவில்லை என தெரிவித்தார்.

இதையும் படிக்க:"அதிக வருவாய் ஈட்ட சூழல் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு" ஸ்டெர்லைட் உரிமையாளர் கருத்து!