வட மாநிலங்களில் நீட் தேர்வில் மெகா மோசடி - சி.பி.ஐ. விசாரணையில் அம்பலம்  

தமிழகத்தில் நீட் தேர்வால் சில மாணவர்கள் தற்கொலை செய்துள்ள நேரத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பயிற்சி மையம், நீட் தேர்வில் மெகா மோசடி செய்ததை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.

வட மாநிலங்களில் நீட் தேர்வில் மெகா மோசடி - சி.பி.ஐ. விசாரணையில் அம்பலம்   

தமிழகத்தில் நீட் தேர்வால் சில மாணவர்கள் தற்கொலை செய்துள்ள நேரத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பயிற்சி மையம், நீட் தேர்வில் மெகா மோசடி செய்ததை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.

நாடு முழுதும் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றதாக ஏற்கனவே புகார்கள் எழுந்தன. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.கே. எஜூகேசன் கேரியர் கைடன்ஸ் என்ற பயிற்சி மையம், நீட் தேர்வில் மெகா மோசடியில் ஈடுபட்டுள்ளதை, மத்திய புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த பயிற்சி மையத்தின் உரிமையாளர் பரிமால், நீட் தேர்வு விடைத்தாளை திருத்தி அதிக மதிப்பெண் வாங்கி தருவதாக உறுதி அளித்து பணம் வசூலித்துள்ளார்.

நீட் தேர்வு விடைகளை முன்கூட்டியே மாணவர்களுக்கு அளிப்பதாக கூறியும், மாணவர்களிடம் பல லட்ச ரூபாய் வசூலித்துள்ளார். மாணவர்களின் பெற்றோரிடம் தலா 50 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு, ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது அம்பலம் ஆகியுள்ளது. தேர்வர்களின் விவரங்கள் மற்றும் ஓ.எம்.ஆர்.தாள்களில் போலியாக திருத்தம் செய்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் 4 மையங்களிலும், ராஞ்சியில் 1 மையத்திலும் ஆள்மாறாட்டம் நிகழ்ந்ததற்கு, நாக்பூரை சேர்ந்த  தனியார் நீட் பயிற்சி மைய உரிமையாளர் மூளையாக செயல்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஐந்து மாணவர்கள் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. கிரிமினல் சதி, மோசடி, ஆள்மாறாட்டம், ஆவணங்களைத் திருத்தி மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பதிலாக நீட் தேர்வு எழுத இருந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கியதும், ஆனால் தேர்வு மையங்களில் சி.பி.ஐ. இருந்ததை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அவர்கள் தேர்வு எழுத செல்லவில்லை எனவும், சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நீட் காரணமாக பல மாணவர்கள் தற்கொலை செய்து வரும் நிலையில், சி.பி.ஐ. அமைப்பின் இந்த நடவடிக்கை மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. மேலும், நீட் தேர்வு தேவையில்லை என கூறும் தமிழக அரசின் கருத்தை, இந்த நீட் முறைகேடுகள் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.