" நாரிசக்தி வந்தன் அபிநியம் மசோதாவை நிறைவேற்ற கடவுள் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்" பிரதமர் மோடி!!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்துள்ளதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் அரசு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில், முதல் நிகழ்வாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். 

இதையடுத்து, புதிய நாடாளுமன்ற மக்களவையில் தனது முதல் உரையை நிகழ்த்திய பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்றக் கட்டிடம் புதிய நவீன இந்தியாவை பறைசாற்றுகிறது. உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் வரவேற்பதாக கூறிய மோடி, இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து முன்னேறி வருகிறது என பெருமிதம் தெரிவித்தார்.

சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா முதல் முறையாக 1996-ல் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய மோடி, எனினும், போதிய எண்ணிக்கை பலம் இல்லாததால் அந்த மசோதா நிறைவேறவில்லை என தெரிவித்தார்.

ஆனால் இந்த வேலையை செய்து முடிக்க கடவுள் தன்னை தேர்ந்தெடுத்திருக்கிறார் என நம்புகிறேன் என பிரதமர் குறிப்பிட்டார். செப்டம்பர் 19, 2023 எனும் இந்த நாள் வரலாற்றில் மிக முக்கிய நாளாக இடம் பெறப்போகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதே இந்த மசோதாவின் நோக்கம் என்றும் நாரிசக்தி வந்தன் அபிநியம் எனும் இந்த மசோதா நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த மசோதா சட்டமாக நிறைவேற ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.