இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம்!

இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், மணிப்பூர் கலவரம் உள்ளிட்டு பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பரபரப்பான சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்றத்தில் இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் வனப் பாதுகாப்பு திருத்த சட்ட மசோதா, ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தனிநபர் டிஜிட்டல் பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட  31 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  மசோதா பட்டியலில் அது இடம்பெறவில்லை என  தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மணிப்பூர் கலவரம், மத்திய புலனாய்வு அமைப்புகளை எதிர்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது, மாநில விவகாரங்களில் ஆளுநர்கள் தலையீடு,  உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி அவையை முடக்க  எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

முன்னதாக  கூட்டத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா தலைமையில் நடந்த  இந்த கூட்டத்தில்  காங்கிரஸ், டி.எம்.சி, என்சிபி, திமுக, ஆர்ஜேடி, சமாஜ்வாதி இடதுசாரிகள் உள்ளிட்ட பிரதான கட்சிகள் பங்கேற்று கூட்டத்தில்  விவாதிக்க வேண்டிய பிரச்னைகளை எடுத்து வைத்துள்ளனர்.