தொடர் கனமழையால் ஸ்தம்பித்தது மும்பை

மகாராஷ்டிராவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் சுவர் இடிந்து விழுந்து 11 பேர் பலியாகியுள்ளனர். 

தொடர் கனமழையால்  ஸ்தம்பித்தது மும்பை

மும்பையில், பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் கனமழையால் கண்டிவிலியின் ஹனுமான் நகர் உள்ளிட்ட பகுதி சாலைகளில் குளம் போல் வெள்ளம் தேங்கியுள்ளன. 



அதுமட்டுமல்லாது தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்துள்ளது. இதனால் தூங்கக்கூட முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. அங்குள்ள ரயில் நிலைய தண்டவாளத்திலும் வெள்ளம் தேங்கி நிற்பதால், ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே பாரத்நகர் பகுதியில், திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதில் சுவர் இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழந்திருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு குழு தகவல் வெளியிட்டுள்ளது. 

இந்தநிலையில் அங்குள்ள சியான் பகுதியில் தேங்கிய மழை நீரில் இளைஞர்கள் குளித்து, புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இது தொற்று பரவும் அபாயச்செயல் என எச்சரிக்கின்றனர்.