நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடையை கழற்ற சொன்ன விவகாரம் - விளக்கமளித்த தேசிய தேர்வு முகமை..

கேரளாவில் நீட் தேர்வின் போது மாணவிகளின் உள்ளாடைகளை கழற்ற வற்புறுத்தியதாக எழுந்த புகாரில், கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து, இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தேசிய தேர்வு முகமை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடையை கழற்ற சொன்ன விவகாரம் - விளக்கமளித்த தேசிய தேர்வு முகமை..

நீட் தேர்வு 2022 : 
 
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு ஜூலை 17 ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் மாணவர்கள் தேர்வு எழுதினர். மொத்தம் 543 நகரங்களில்  3800க்கும் அதிகமான தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 95% மாணவர்கள் கலந்துகொண்டதாக தகவல் வெளியானது. தேர்வானது பிற்பகல் 2 மணி முதல் 5.20 வரை நடைபெற்றது. 

நீட் தேர்வுக்கான கட்டுப்பாடு :  

1. முழுக்கை உடைய ஆடை அணிந்திருக்கும் மாணவர்களுக்கு அனுமதியில்லை.
2. குறைந்த குதிகால் கொண்ட காலணிகளுக்கு அனுமதி உண்டு. ஷூக்களுக்கு அனுமதியில்லை.
3.  பர்ஸ், பெல்ட், தொப்பி போன்றவற்றிற்கு தடை.
4. கைக்கடிகாரம், வளையல், கேமரா, மின்னணு சாதனங்கள், ஆபரணங்கள், உலோக பொருட்கள் போன்றவற்றிற்கும் தடை.  
 

நீட் தேர்வு 2022 ல் நடந்த பிரச்சனை : 

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள மார்தோமா இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி வளாகத்தில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவியின் தந்தை, தேர்வின் போது தனது மகளின் மேல் உள்ளாடைகளை கழற்ற சொல்லி வற்புறுத்தியதாக கொட்டாரக்கரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தேசிய தேர்வு முகமையால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள், ஒவ்வொரு மாணவ மாணவியரையும் தனித்தனியே மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதித்த போது மாணவிகளின் உள்ளாடைகளில் காணப்படும் கொக்கி கண்டறியப்பட்டதாக தனது மகளிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தன் மகளை போலவே பிற மாணவிகளையும் நிர்பந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

பிரச்சனை குறித்த விளக்கம் - தேசிய தேர்வு முகமை: 

இந்த சம்பவத்திற்கு கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் பிந்து கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேசிய தேர்வு முகமை, குறிப்பிட்ட இந்த தேர்வு மையத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என தெரிவித்துள்ளது. தேர்வுக்கு முன்னரோ அல்லது பின்னரோ இது தொடர்பாக எந்த வித புகார்களையும் நாங்கள் பெறவில்லை என்றும் கூறியுள்ளது.