தடுப்பூசிகளின் வீரியத்தை குறைக்கும் புதிய கொரோனா வைரஸ்,. எச்சரிக்கும் தொற்றுநோய் ஆய்வு நிபுணர்.! 

தடுப்பூசிகளின் வீரியத்தை குறைக்கும் புதிய கொரோனா வைரஸ்,. எச்சரிக்கும் தொற்றுநோய் ஆய்வு நிபுணர்.! 

மரபணு மாறிய டெல்டா பிளஸ் வைரஸ், தடுப்பூசிகளின் வீரியத்தை குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு திறனையும் அழித்துவிடும் என தொற்றுநோய் ஆய்வு நிபுணர் எச்சரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா 2வது அலையில் உருமாறிய வைரஸ் மிகப்பெரிய தொற்று பாதிப்பை ஏற்படுத்தி உயிர்சேதத்தை அதிகரித்தது. இதனிடையே இந்தியாவில் மரபணு மாறிய டெல்டா பிளஸ் வைரஸ் புதிதாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வைரஸ் ‘அச்சுறுத்தலுக்குரியது’ என்ற பிரிவில் மத்திய அரசு இன்னும் வகைப்படுத்தவில்லை. ஆனால் இந்த புதிய வகை வைரஸ், மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தொற்று நோய் ஆய்வு நிபுணர் ஷாகித் ஜமீல் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்த வைரஸானது நோய் எதிர்ப்பு திறனை முழுமையாக அழிப்பதோடு, தற்போது பயன்பாட்டிலுள்ள இரு தடுப்பூசிகளின் வீரியத்தையும் செயலிழக்க செய்யக்கூடியது என அவர் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் இந்த வைரஸ் டெல்டா வைரஸிலிருந்து உருமாறியது என்பது மட்டுமல்லாது, இதில் தென் ஆப்ரிக்காவில் காணப்பட்ட பீட்டா வைரஸின் மரபணு மூலக்குறுக்களும் இருப்பதாக ஜாமீல் தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமல்லாது அஸ்ட்ரஜெனிகா தயாரிப்பிலான தடுப்பூசியை தென் ஆப்ரிக்காவுக்கு வழங்கியிருந்தபோது, அவை அந்த வைரஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை என கூறப்பட்டிருந்ததாகவும், இதன் காரணமாக தான் இந்த புதிய வகை வைரஸுக்கு தடுப்பூசிகள் பயனளிக்காது என தான் தெரிவித்துள்ளதாகவும் ஜமீல் கூறியுள்ளார். மேலும் டெல்டா பிளஸ் வைரஸானது அதிக பேருக்கு பரவுமா என்பதற்கு சரியான ஆதாரம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மத்திய பிரதேசம், கேரளா மற்றும் மகராஷ்டிராவை சேர்ந்த சிலருக்கு இந்த புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதன்படி மத்திய பிரதேசத்தில், தடுப்பூசியின் இரு டோஸ்களை செலுத்திக்கொண்ட ஒருவருக்கும், கேரளாவில் 4 வயது சிறுவன் உட்பட 3 பேருக்கும், மகராஷ்டிராவில் 21 பேருக்கும் இந்த தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.