இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்று...

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியதால்  மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும்  ஒமிக்ரான் தொற்று...

கொரோனா 2-வது அலை இன்னும் ஓயாத நிலையில்,தென்ஆப்ரிக்காவில் காணப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா உலக நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.இது வேகமாக பரவக்கூடியது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளதால், உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவிலும் ஒமிக்ரானை கட்டுப்படுத்தும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும்  முதல் முதலில்  கர்நாடகாவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான், டெல்லி  மகாராஷ்டிரா ஆந்திரா என சுமார் 10 மாநிலங்களில் பரவிய நிலையில் அண்மையில்   தமிழகத்திலும் நுழைந்துள்ளது.    

இந்தநிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய சுகராதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், கடந்த 20 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் உள்ளதாக குறிப்பிட்டார்.  மேலும் ஒமிக்ரான் வகை கொரோனா  91 நாடுகளுக்கு பரவி இருப்பதாகவும், இந்தியாவில் 11 மாநிலங்களில்  இந்த  தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டி உள்ளதாகவும் லாவ் அகர்வால் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். 

இதில், மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 32 பேருக்கும், டெல்லியில் 22 பேருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில் 17 பேர் ,  கர்நாடக மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் தலா 8 பேருக்கும், குஜராத் மற்றும் கேரளாவில் தலா 5 பேர் என பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக லாவ் அகர்வால் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிர்வாக இயக்குனர் பல்ராம் பார்கவா, ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.