குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி - காங்கிரஸ் காரிய கமிட்டி குழு பரிந்துரை!

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி என்ற விதிமுறையை அமல்படுத்தும்படி காங்கிரஸ் காரிய கமிட்டி குழு பரிந்துரைத்துள்ளது.

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி - காங்கிரஸ் காரிய கமிட்டி குழு பரிந்துரை!

காங்கிரஸ் கட்சியின் "சிந்தனை அமர்வு கூட்டம்" மாநாடு  உதய்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று மாலையுடன் நிறைவு பெறவுள்ளது.

இந்நிலையில் கடந்த 2  நாட்களாக கட்சியின் மூத்த தலைவர்கள் முன்மொழிந்த தீர்மானங்கள் குறித்து விவாதித்து, ஒப்புதல் அளிப்பதற்காக காங்கிரஸ்  காரிய கமிட்டி குழு இன்று கூடியது.

அப்போது, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவே முக்கியமான நோக்கம் என்பதால், கட்சியில் வயது வரம்பின்றி அனைவருக்கும் பொறுப்பு வழங்கி, ஒவ்வொரு பதவிக்கும் குறிப்பிட்ட காலம் நிர்ணயம் செய்ய வேண்டும் என உயர்மட்ட குழு பரிந்துரைத்தது.

இது தவிர குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி என்ற விதிமுறைகளையும் அமல்படுத்த குழு காரிய கமிட்டியிடம் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக நாட்டின் பொருளாதாரம், விவசாயம், இளைஞர் நலன், சமூக நீதி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் உருவாக்கப்பட்ட குழுக்கள் தயாரித்த அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் இன்று காலை ஒப்படைத்தனர்.

இதனிடையே கூட்டத்தில் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பாக விரிவான ஆலோசனை நடைபெற்றதாகவும், அதில் பெரும்பாலானோர் ராகுல் காந்தியை தேர்வு செய்த நிலையில், சிலர் பிரியங்கா காந்தியை தலைவர் ஆக்கலாம் என யோசனை வழங்கியுள்ளனர்.

மேலும் அவரை உத்தரபிரதேசத்துடன் அடக்கி விடாமல், அவருக்கென பரந்த வெளியை உருவாக்கி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பட்சத்தில் அது கட்சிக்கு மிகப்பெரிய செல்வாக்கை பெற்று தரும் என கூறியுள்ளனர்.

இருப்பினும் இந்த பரிந்துரைக்கு மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், தற்போதைய சூழலில் கட்சிக்குள் இருக்கும் அனைத்து குறைகளையும் தீர்க்க ராகுல் காந்தியை தலைவராகக் கொண்டு வருவது தான் ஒரே வழி என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

எனினும் இதுகுறித்து எதையும் இறுதி செய்யாத இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஜூலையில் நடைபெறும் கட்சி தேர்தலுக்கு பின் அதனை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.