இந்தியாவுக்கு பதில் பாரத் என அழைப்பதா? மத்திய அரசுக்கு இந்தியா கூட்டணி கடும் கண்டனம்!

இந்தியாவுக்கு பதில் பாரத் என அழைப்பதா? மத்திய அரசுக்கு இந்தியா கூட்டணி கடும் கண்டனம்!

ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத் குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசக்கிறது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது என்று சாடியுள்ளார்.

மேலும், ”அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பதைப் போல, இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது எனவும், தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும் என்றும் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.

அதேபோல், இந்திய அரசியலமைப்பு, மத்திய பாஜக அரசால் தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டியுள்ளார். ”பாரத் குடியரசுத் தலைவர்” என்ற பெயரில் அழைப்புகள் வருவதை தாங்கள் பார்த்ததில்லை என்று திமுக எம்பி கனி மொழி தொிவித்துள்ளார்.  இந்திய நாட்டிற்கு பாரத் என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் தெரிவித்ததால், இதனை பாஜக செய்கிறதா என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க : சனாதனம் சர்ச்சை: உ.பி சாமியார் - உதயநிதி மீது புகார்...!

இந்திய பெயர் மாற்றத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நாடு 140 கோடி மக்களுக்கு சொந்தமானது எனவும், ஒரு கட்சிக்கு சொந்தமானது அல்ல எனவும் தெரிவத்துள்ளார். உலகிற்கு இந்தியா என்ற பெயர் தான் தெரியும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியா என்ற பெயரை மாற்றும் அவசியம் எங்கிருந்து வந்தது எனவும் மம்தா கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியா கூட்டணியை பார்த்து பிரதமர் மோடி அச்சமடைந்திருப்பதாக பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பயம் காரணமாகவே இதுபோன்ற செயல்களில் பாஜகவினர் ஈடுபட்டு வருவதாக தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.

முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி டி.ஆர் பாலு, அரசியல் சாசனத்திலேயே பாரதம் என்ற பெயர் உள்ளதால் பாரத் என்ற பெயரை எதிர்க்க முடியாது என்றார்.  எதிர்க்கட்சிகளின் கூட்டணி 'இந்தியா' என பெயர் வைத்துள்ளதால் இந்தியா என்ற வார்த்தையை பயன்படுத்த பாஜக அஞ்சுகிறது என்றும் அவர் கூறினார்.