இந்தியாவில் தாக்குதல் நடத்த பாக். உளவு அமைப்பு சதி... உளவுத்துறையின் தகவலால் நாடு முழுவதும் உஷார்நிலை...

இந்தியாவில் பண்டிகை காலங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் தாக்குதல் நடத்த பாக். உளவு அமைப்பு சதி... உளவுத்துறையின் தகவலால் நாடு முழுவதும் உஷார்நிலை...

தசரா,  தீபாவளி என இந்தியாவில் பண்டிகை காலங்கள் நெருங்கி வருகிறது. இந்நிலையில் இந்தப் பண்டிகை சமயங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. 

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டிபன்பாக்ஸ் வெடிகுண்டுகள் மூலம் தாக்குதலை நடத்தவும், பயங்கரவாதிகளை எல்லை வழியாக அனுப்பி முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த சதி வேலையில் ஈடுபடுவதற்காக டெல்லியில் பதுங்கி இருந்த 6 பயங்கரவாதிகளை டெல்லி காவல்துறையினர் சமீபத்தில் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.  

இதனிடையே இன்று ஜம்மு காஷ்மீரின் உரி அருகேயுள்ள ராம்பூர் பகுதியில் 3 பயங்கரவாதிகளைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடமிருந்து  5 ஏ.கே 47 ரக துப்பாக்கிகள், 8 கைத் துப்பாகிகள் மற்றும் 79 கையெறி குண்டுகளைப் பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த மூன்று பயங்கரவாதிகளும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வனப்பகுதியில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியர்கள் என்றும், பாதுகாப்புபடையினரின் தீவிரமாக கண்காணித்து அவர்களை சுட்டுக் கொன்றதாகவும் ராணுவத்தின் சினார் பிரிவு காமாண்டர் டிபி பாண்டே தெரிவித்துள்ளார்.