திட்டமிடப்பட்ட சதி- உத்தவ் தாக்கரே!!

திட்டமிடப்பட்ட சதி- உத்தவ் தாக்கரே!!

அமலாக்க துறை அதிகாரிகள்இன்று சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.  பின்னர் அவர்  சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் தெரிவித்துள்ளது.

விசாரணை அழைப்பும் மறுப்பும்:

மும்பை 'சால்' பகுதியில் நில முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கில் ராவத் மற்றும் அவரது மனைவி அமலாக்க துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஜூலை 1ஆம் தேதி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய மும்பையில் உள்ள அமலாக்க துறை முன்பு ராவத்ஆஜரானார். அதன் பிறகு, அமலாக்க துறை அவருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் நடைபெற்று கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை காரணம் காட்டி அவற்றைத் தவிர்த்துவிட்டார்.


அமலாக்க துறையின் விசாரணையும் கைதும்:

இதனைத்தொடர்ந்து ஜூலை 31ம் தேதி காலை 7 மணியளவில், அமலாக்கதுறை அதிகாரிகள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை  பணியாளர்களுடன், புறநகர் பாண்டுப்பில் அமைந்துள்ள ரவுத்தின் 'மைத்ரி' பங்களாவில் சோதனையை தொடங்கினர்.

நில மோசடி வழக்கில் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்தை அமலாக்க இயக்குனரகம் ஞாயிற்றுக்கிழமை அவரது மும்பை வீட்டில் ஒன்பது மணி நேர சோதனைக்குப் பிறகு கைது செய்தது. அதைத் தொடர்ந்து அமலாக்க இயக்குனரக அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காததால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜுலை 31 நள்ளிரவு 12:05 மணிக்கு அவர் கைது செய்யப்பட்டார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பணம் மீட்பும் சகோதரர் குற்றசாட்டும்: 

அவரது வீட்டில் இருந்து ரூ. 11.5 லட்சத்தை அமலாக்கதுறை மீட்டுள்ளது.  அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 10 லட்சம் ரூபாய் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு சொந்தமானது என்று ராவுத்தின் சகோதரர் கைது செய்யப்பட்டபோது கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சஞ்சய் ராவத் பதில்:

அமலாக்க துறை அலுவலக கட்டிடத்திற்கு வெளியே காத்திருந்த ஊடகவியலாளர்களிடம் பேசிய ராவத் அமலாக்க துறை அவரைக் கைது செய்ய விரும்புவதாகவும் அதற்கு அவர் தயாராக இருப்பதாகவும் ராவத் கூறியிருந்தார். அரசாங்க அமைப்புகள் அவருக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாகவும், ஆனால் அவர் கட்சியை விட்டு விலகப் போவதில்லை எனவும் மேலும் தெரிவித்திருந்தார்.

மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணியில் இருப்பதால் அரசியல் பழிவாங்கல் காரணமாக அவர் குறிவைக்கப்படுவதாகவும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

திட்டமிடபட்ட சதி:

"எந்த ஊழலிலும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மறைந்த பாலாசபேப் தாக்கரே மீது சத்தியம் செய்கிறேன்" என்று அமலாக்கதுறை விசாரணைக்கு முன்னரே ராவத் ட்வீட் செய்திருந்தார்.  “நான் இறப்பனே தவிர, சிவசேனாவை விட்டு விலக மாட்டேன்" என்றும் ராவத் கூறியுள்ளார். 

அமலாக்க துறை ராவத்தை கைது செய்ததைத் தொடர்ந்து , தற்போதைய நடவடிக்கை கட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான "சதியின்" ஒரு பகுதியாகும் என்று உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி:

இன்று காலை நீதிமன்றத்தில் ராவத் ஆஜர்படுத்தப்பட இருந்த நிலையில் ஜேஜே மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்டுள்ளார். 

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு அமலாக்க துறையின் தெற்கு மும்பை அலுவலகத்தில் இரவைக் கழித்த ராவத், மதியம் 12.30க்குப் பிறகு மருத்துவ பரிசோதனைகாக ஜேஜே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.