குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு.. சோனியா காந்தியை நாளை சந்திக்கிறார் சரத்பவார்!!

குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்ய, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், நாளை டெல்லியில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு.. சோனியா காந்தியை நாளை சந்திக்கிறார் சரத்பவார்!!

நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், குடியரசுத் தலைவருக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கக் கூடிய பணிகளில் தேசிய கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. குறிப்பாக குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநிலக் கட்சிகளின் பங்கும் அதிக அளவில் தேவை என்பதால், மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் ஆலோசனை நடத்த தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகளை பாஜக மேற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தரப்பில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்க்கே ஆலோசனை நடத்தினார். இதில் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து, பொதுவேட்பாளராக சரத் பவாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் சார்பில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்ய, சரத்பவார், நாளை சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை புனேவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சரத் பவார் உறுதிபடுத்தியுள்ளார்.