அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் 46ம் ஆண்டு நிறைவு... இருண்ட நாட்களை ஒருபோதும் மறக்க முடியாது - மோடி ட்வீட்

நாட்டில் அவசரநிலை அமலில் இருந்த இருண்ட நாட்களை ஒருபோதும் மறக்க முடியாது என பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் 46ம் ஆண்டு நிறைவு... இருண்ட நாட்களை ஒருபோதும் மறக்க முடியாது - மோடி ட்வீட்
இந்தியாவில் கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25 முதல் 1977-ஆம் ஆண்டு மார்ச் 21 வரை நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனை மற்றும் அறிவுறித்தலின்பேரில், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் 46 ஆம் ஆண்டு நிறைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 
 
இதையொட்டி, பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதன் மூலம் காங்கிரஸ் ஜனநாயக நெறிமுறைகளை மிதித்ததாகவும், அவசர நிலையை எதிர்த்து இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க போராடிய அனைவரையும் இந்நாளில் நினைவில் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
 
மற்றுமொரு பதிவில், நாட்டில் அவசரநிலை அமலில் இருந்த இருண்ட நாட்களை ஒருபோதும் மறக்க முடியாது எனவும்,  இந்தியாவின் ஜனநாயகம் என்ற உணர்வை வலுப்படுத்த நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்ற உறுதிமொழியை நாம் அனைவரும் இந்நாளில் ஏற்க வேண்டும் எனவும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதிப்புகளுக்கு ஏற்ப வாழ்வோம் வேண்டும் எனவும் கூறியுள்ளார்.