புறக்கணிக்கப்பட்டாரா புதுச்சேரி முதலமைச்சர்....

புறக்கணிக்கப்பட்டாரா புதுச்சேரி முதலமைச்சர்....

இந்தியாவில் 44-வது சர்வதேச செஸ்  ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபரத்தில் வரும் 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  சர்வதேச செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜூன் 19 அன்று பிரதமர் நரேந்திர மோடி  பிரச்சார ஜோதியினை தொடங்கி வைத்தார்.

ஒலிம்பியாட் பிரச்சார ஜோதி:

தஞ்சாவூரில் இருந்து புதுச்சேரி வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் பிரச்சார ஜோதியை கிராண்ட்மாஸ்டர் ஆகாஷ் பெற்றுக் கொண்டு இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கிற்குள் ஊர்வலமாக கொண்டு சென்றார். அங்கு பள்ளி மாணவ-மாணவிகள் ஜோதியை மிக உற்சாகமாக கைத்தட்டி வரவேற்றனர்.

புறக்கணிக்கப்பட்ட புதுச்சேரி முதலமைச்சர்:

அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளை புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். பிரச்சார ஜோதி விழாவில் கலந்து கொள்வதற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சி மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் முதலமைச்சர் ரங்கசாமியின் புகைப்படம் இடம்பெறவில்லை.  துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

அரசியல் குழப்பம்:

இதனால் அதிருப்தியடைந்த முதலமைச்சர் ரங்கசாமி விழாவை புறக்கணித்துள்ளார். ஆளும் பாஜக அரசு முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்து ஆளுநருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் புதுச்சேரி அரசியலில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிற மாநிலங்களில்:

மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற பிரச்சார ஜோதி நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரின் புகைப்படத்திற்கு அருகில் அம்மாநில முதலமைச்சர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தது. ஆனால் புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய அரசின் பேனரில் முதலமைச்சர் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசையின் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது.