மணிப்பூர் சென்ற ராகுல்காந்தி...வழியிலேயே நிறுத்திய போலீசார்...போராட்டத்தில் கிராமத்தினர்!

மணிப்பூர் சென்ற ராகுல்காந்தி...வழியிலேயே நிறுத்திய போலீசார்...போராட்டத்தில் கிராமத்தினர்!

மணிப்பூரில் ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பாதுகாப்புப் படையினர் விரட்டியடித்தனர்.

மணிப்பூரில் குகி பழங்குடி மற்றும் மெய்டி இனத்தவர்களிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்ததில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ந்து 3 மாதங்களாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் சென்றார். 

இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர், சுராஜத்பூர், இம்பால் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள  முகாம்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருந்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு 20 கிலோ மீட்டருக்கு முன்னதாக உள்ள பிஷ்ணுபூரில் ராகுல்காந்தியின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து  போலீசாருடன் காங்கிரஸார் வாக்குவாதம் செய்தனர். 

இதையும் படிக்க : திமுக குடும்ப அரசியல் தான் நடத்துகிறது...பிரதமருக்கு முதலமைச்சர் பதிலடி!

ராகுல் பயணிக்க இருந்த சாலையில், கையெறி குண்டுகளை வீச சிலர் திட்டமிட்டிருந்ததாகவும், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டியும் அனுமதி மறுக்கப்பட்டதாக போலீஸ் கூறியதால் ராகுல் மீண்டும் இம்பாலுக்கு  திரும்பினார்.

இந்நிலையில்  ராகுலின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்ட பிஷ்ணுபூரில் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல்காந்தியை அனுமதிக்கக் கோரி கோஷங்கள் எழுப்பிய நிலையில், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பாதுகாப்புப் படையினர் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து, ராகுல் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது தொடர்பாக உரிய விளக்கமளிக்கப்பட வேண்டுமென காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.