டெல்லியில் பாலியல் வன்முறையில் 9 வயது தலித் சிறுமி கொலை: சிறுமியின் பெற்றோரை சந்தித்த ராகுலின் டுவிட்டர் பதிவுக்கு எதிர்ப்பு!  

டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக கூறப்படும் 9 வயது தலித் சிறுமியின் பெற்றோரை சந்தித்த புகைப்படத்தை ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். அது சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்துவதாகவும், அதனை நீக்குமாறு கூறி டுவிட்டர் நிறுவனத்திடம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் பாலியல் வன்முறையில் 9 வயது தலித் சிறுமி கொலை:  சிறுமியின் பெற்றோரை சந்தித்த ராகுலின் டுவிட்டர் பதிவுக்கு எதிர்ப்பு!   

கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதியன்று தென் மேற்கு டெல்லியின் கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டிற்கு அருகில் உள்ள இடுகாட்டிற்கு குடிநீர் எடுத்து வரச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இடுகாட்டிலிருந்த பூசாரி ராதேஷ்யாம் மற்றும் மூவர் சிறுமியின் தாயாரை அழைத்து அவர் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக உடலை காட்டியுள்ளனர். போலீசாருக்கு தகவல் தர வேண்டாம் எனக் கூறி உடலை அவர்களே எரியூட்டி உள்ளனர். சந்தேகமடைந்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். இடுகாட்டிலிருந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர். சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக நால்வரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ், எம்.பி., ராகுல் காந்தி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை நேற்று சந்தித்தார். பின்னர் அது தொடர்பான படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அவருடைய பெற்றோரின் கண்ணீர் ஒன்றே ஒன்றை தான் சொல்கிறது என்றும், அவர்களது மகளுக்கு, இந்த நாட்டின் மகளுக்கு நீதி வேண்டும் என்பது தான் அது என்றும் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் டுவிட்டர் இந்தியா அதிகாரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் அவரது பெற்றோரின் புகைப்படத்தை டுவீட் செய்வது போக்சோ சட்ட மீறல் ஆகும் என்றும்,  ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி அப்பதிவை நீக்க வலியுறுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.