அக்னிபாத் திட்டம்: இளைஞர்கள் ரயில்களுக்கு தீ வைத்ததில் 700 கோடி ரூபாய் இழப்பு..!

அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் ரயில்களுக்கு தீ வைத்ததில், சுமார் 700 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அக்னிபாத் திட்டம்: இளைஞர்கள்  ரயில்களுக்கு தீ வைத்ததில் 700 கோடி ரூபாய் இழப்பு..!

ராணுவத்தில் குறுகிய காலம் சேவையாற்றும் வகையில் அக்னிபாத் என்னும் புதிய திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. ஆனால் இதற்கு ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி, உத்திரபிரதேசம், பீகார், அரியானா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கினர். போராட்டத்தின் போது ரயில்களுக்கு தீவைத்தும், பேருந்துகளை தீயிட்டுக் கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். 

இளைஞர்கள் ரயில்களை கொளுத்தியதில், இந்திய ரயில்வே துறைக்கு சுமார் 700 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலின் ஒரு பெட்டியை தயாரிக்க குறைந்தபட்சம் 40 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என கூறப்படுகிறது. இருக்கைகள், மின்விசிறிகள் மற்றும் இதர மின்சாதனங்கள் மற்றும் கழிவறைகள் செய்ய சுமார் 50 லட்சம் முதல் 70 லட்சம் வரை செலவாகும் என்றும், ஜெனரல் கோச் அமைக்க 80 முதல் 90 லட்சம் வரையும், ஸ்லீப்பர் கோச் அமைக்க 1 கோடியே 25 லட்சம் வரை செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இதுவரை 60 ரயில் பெட்டிகள் மற்றும் 11 இன்ஜின்களுக்கு தீயிட்டு வைத்துள்ளதாகவும், இதன்மூலம் 700 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.