புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் 24 நாட்களுக்குப் பிறகு, புரட்டாசி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. 

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் 24 நாட்களுக்குப் பிறகு, புரட்டாசி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. 

ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, கடந்த மாதம் 15ஆம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில், புரட்டாசி மாத பூஜைகளுக்காக கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். வரும் 21ஆம் தேதி வரை, 5 நாட்களுக்கு பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷ பூஜை மற்றும் உச்ச பூஜைக்கு பிறகு, மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும் என்றும், மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாராதனை, அபிஷேகத்துடன், இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும் என்றும் திருவாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நாள்தோறும் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உட்பட சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன.

மேலும், கொரோனா கட்டுப்பாடு காரணமாக, ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில், நாளொன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதையொட்டி, சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.