அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல்... 40-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலி... இந்தியா கடும் கண்டனம்...

காபூல் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்டை தாக்குதல்களுக்கு  இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல்... 40-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலி... இந்தியா கடும் கண்டனம்...

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் விமான நிலையத்தைச் சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் எச்சரிக்கை விடுத்தன. விமான நிலையத்திற்கு வெளியே உள்ள மக்கள் அந்த பகுதியை காலி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தின. 

இதற்கிடையே, காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று இரவு இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. பிரதான அபே கேட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டனர். குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காபூலில் நடந்த குண்டுவெடிப்பை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது என்றும், இந்த தாக்குதல் பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமையாக நிற்க வேண்டியதன் அவசியத்தை வலுப்படுத்துகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.