கர்நாடகாவுக்கு செல்லும் மின்சார வயர்களை துண்டித்து போராட்டம்... தீர்மானம் நிறைவேற்றிய விவசாயிகள்!!

கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நெய்வேலியில் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கம் அறிவித்துள்ளது. 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள அச்சங்கத்தின் அலுவலகத்தில் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து விவசாய சங்க தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காத கர்நாடக அரசுக்கு நெய்வேலியில் இருந்து மின்சாரம் வழங்கக் கூடாது என்று வருகிற 16-ம் தேதி அன்று நெய்வேலியில் இருந்து கர்நாடகத்திற்கு கொண்டு செல்லப்படும் மின்சார வயர்களை துண்டித்து போராட்டம் நடத்தப் போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இதுமட்டுமன்றி டெல்டா  மாவட்டங்களில் தண்ணீர் இன்றி குருவை பயிர்கள் அழிந்துள்ளதற்காக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு லட்சம் கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர வேண்டும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போல ஸ்டாலினும் தண்ணீரைப் பெற்றுத் தரப் போராட்டம் நடத்த வேண்டும் எனவும் நெல் குயின்டாலுக்கு ரூ 5,400, ஒரு டன் கரும்புக்கு 8500 வழங்க வேண்டும் அவ்வாறு விவசாயிகளுக்கு உரிய லாபகரமான விலை மற்றும் நியாயம் கிடைக்காவிட்டால் டெல்லி சென்று போராட அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது தமிழக அரசு வழங்கியுள்ள குறுவை ஏப்பீட்டுத் தொகை என்பது நாற்றங்காலுக்கு கூட போதுமானதாக இல்லை, விவசாயிகளை இந்த நாட்டின் அடிமைகள் போல நினைக்கிறார்களோ என்னவோ அதனால் தான் பிச்சை போடுவது போல பணத்தை கொடுக்கிறார்கள் என்றும், எனவே ஒரு ஏக்கருக்கு அரசு நஷ்ட ஈடாக 60,000 தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.