பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை துவங்கி வைத்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர்!!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை துவங்கி வைத்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர்!!

புதுச்சேரியில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் என்ற பதவியும் வேந்தர் என்ற பதவியும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது எனவும், பல்கலைக்கழகத்தை மேம்படுத்த தான் ஆளுநர்களுக்கு வேந்தர் பதவி வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று முதல் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இன்று (ஜூலை 15) முதல் செப்டம்பர் 28ம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார். அதன் படி இன்றுமுதல் பல்வேறு இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.  

புதுச்சேரியில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார். லாஸ்பேட் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெரறும் நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தனர்.

அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார், மேலும் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கான திட்டம் போடப்பட்டுள்ளது, இது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என தெரிவித்த அவர், பள்ளி மாணவர்களுக்கான பாட புத்தகம், சீருடை விரைவில் வழங்கப்படும் எனவும் பள்ளி மாணவர்களுக்கான பேருந்து  சேவை துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ஆளுநர் என்ற பதவியும் வேந்தர் என்ற பதவியும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது எனவும், பல்கலைக்கழகத்தை மேம்படுத்த தான் ஆளுநர்களுக்கு வேந்தர் பதவி வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார். மேலும் காமராஜர் பல்கலை கழக விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டது, மாணவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த மட்டும் தான். எனவே, இதனை அரசியலாக எடுத்துக்கொள்ளாமல், மத்திய மாநில அரசுகளை சார்ந்தவர்கள் இணை ஆளுநர்களோடு இணைந்து பட்டமளிப்பு விழாக்களை மாணவர்களுக்கான வழிகாட்டு விழாவாக கொண்டு செல்ல வேண்டுமோ என்ற எண்ணம் தனக்கு வருவதாக தமிழிசை செளந்தரராஜன் பேசினார்.