சட்டப்பேரவையில் பெண்களை இழிவாக பேசிய காங். எம்.எல்.ஏ..!

பலாத்காரத்தை தடுக்க முடியாவிட்டால் அனுபவிக்க வேண்டும்..! எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை..!

சட்டப்பேரவையில் பெண்களை இழிவாக பேசிய காங். எம்.எல்.ஏ..!

கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏவின் பேச்சு மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று விவசாயிகள் பிரச்னை எழுப்பப்பட்டது. இது குறித்து விரிவாக ஆலோசிக்க நேரம் ஒதுக்குமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது பேசிய சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே, அனைத்து உறுப்பினர்களும் பேச நேரம் ஒதுக்கினால் எப்படி அலுவல்களை மேற்கொள்வது. நீங்கள் என்ன முடிவு செய்தாலும் நான் ஆம் என்று தான் சொல்வேன். இப்போது இங்கு இருக்கும் நிலைமை என் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. இதை நான் சமாளிக்க முடியாது. அதனால் அமைதியாக நடப்பதை அனுபவிக்கலாம் என முடிவு செய்துவிட்டேன். எனது அக்கறை எல்லாம் அவை தடைபடாமல் அலுவல் நடக்க வேண்டும் என்பதே என்றார்.

அதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்எல்ஏ கேஆர் ரமேஷ் குமார், ஒரு சொலவடை இருக்கிறது. பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாவிட்டால் அமைதியாகப் படுத்து அனுபவிக்க வேண்டும் என்றும், நீங்களும் அந்த நிலையில் தான் இருக்கிறீர்கள் என்று சபாநாயகரைப் பார்த்து கூறினார். எம்எல்ஏவின் இந்தக் கருத்துக்கு 
அவையில் ஒரே ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக அவையில் சிரிப்பொலி எழுந்தது. சபாநாயகரும் ஆமோதிப்பது போல் சிரித்தார். பெண்ணின் மாண்பை சிதைக்கும் எம்எல்ஏ.,வின் இந்தப் பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரமேஷ் குமாரும் கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர். அப்படியிருக்கையில், அவரே ஒரு சட்டப்பேரவையில் இது போன்று பெண்களை அவமதிக்கும் வகையில் பேசுவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளாது. ஏற்கனவே கர்நாடகாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகவுள்ளது. கடந்த ஜனவரி 2019 முதல் மே 2021 வரை மாநிலத்தில் 1,168 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளதாக மாநில காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அப்படியிருக்கையில் ஒரு எம்.எல்.ஏ ஒருவர் இவ்வாறாக பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பதும், அதற்கு சபாநாயகர் உட்பட யாரும் கண்டனம் தெரிவிக்காததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.