வெளி உணவுகளை தடை செய்ய திரையரங்குகளுக்கு உரிமை உண்டு - உச்சநீதிமன்றம்

வெளி உணவுகளை தடை செய்ய திரையரங்குகளுக்கு உரிமை உண்டு - உச்சநீதிமன்றம்

வெளியில் இருந்து உணவு பொருட்களை எடுத்து வரக்கூடாது எனக்கூற தியேட்டர்களுக்கு உரிமை உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் அரசு விதிகளின் படி, திரையரங்குகளில் பார்வையாளர்கள் வெளியில் இருந்து கொண்டு வரும் உனவுகளை அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த தீர்ப்பை எதிர்த்து, திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வெளி உணவுகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாகவும், திரையரங்கில் குடிநீர் வைக்கப்படுவதில்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், திரையரங்க உரிமையாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதன், திரையரங்க வளாகங்கள் பொதுச்சொத்து அல்ல. அதனுள் செல்வதற்கான அனுமதி, திரையரங்க உரிமையாளரால் வழங்கப்படுகிறது. மேலும், பார்வையாளர்கள் உள்ளே உணவை வாங்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என்று வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திரையரங்க உரிமையாளர்கள் திரையரங்கிற்கு உள்ளே உணவுப் பொருட்கள் கொண்டு வருவது தொடர்பான விதிமுறைகளை உருவாக்க முழு உரிமை உள்ளது. அதே நேரம் திரைப்படம் பார்க்க வருபவர்கள் அவற்றை சாப்பிடாமல் இருக்கவும் அவர்களுக்கு தனிப்பட்ட உரிமை உள்ளது. குழந்தைகளுக்கு பெற்றோர் கொண்டு வரும் உணவை எடுத்துச் செல்லும்போது திரையரங்குகள் ஆட்சேபனை தெரிவிக்கக் கூடாது. வெளி உணவு பொருட்களை திரையரங்கத்திற்குள் எடுத்து வரக்கூடாது என்பது திரையரங்க உரிமையாளர்களின் முடிவு. அதில் தலையிட முடியாது. எனவே திரைப்படம் பார்ப்பவர்கள் திரையரங்க விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

அதே நேரத்தில் தரமான மற்றும் சுகாதாரமான குடிநீர் என்பது இலவசமாக திரையரங்குகளில் வைக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு பெற்றோர் உணவை எடுத்துச் செல்லும்போது திரையரங்குகள் ஆட்சேபனை தெரிவிக்கக் கூடாது என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  

-- சுஜிதா ஜோதி

இதையும் படிக்க : காரில் உரசி பேருந்து சக்கரத்தில் சிக்கிய பெண் பலி...