சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்... மேற்குவங்கத்தில் 4 தொகுதிகளிலும் திரிணாமுல் வெற்றி...

மேற்கு வங்கம் அரியானா உள்ளிட்ட 13  மாநிலங்களில் 29 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்  பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்... மேற்குவங்கத்தில் 4 தொகுதிகளிலும் திரிணாமுல் வெற்றி...

29 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், மே.வங்கத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பு பாஜக வசம் இருந்த தின்ஹாடா தொகுதியில் உதயன் குஹா 1 லட்சத்து 63 ஆயிரத்து 5 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இமாச்சல் மற்றும் ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி மக்களவைத் தொகுதியை பாஜகவிடம் இருந்து கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 

ராஜஸ்தானில், காங்கிரஸ் கட்சி 18,725 மற்றும் 20,606 வாக்குகள் வித்தியாசத்தில் தரியாவாத் மற்றும் வல்லப்நகர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 31 ஆண்டுகளுக்குப் பிறகு, மத்தியப் பிரதேசத்தின் பாஜகவின் பாரம்பரிய தொகுதியான ராய்கானையும் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு இடத்தையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. 

இருப்பினும், எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியான ஜோபாட் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிரித்விபூர் சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் இழந்தது. அதே நேரத்தில், பாஜக தனது கந்த்வா மக்களவைத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டது. 

அசாமில் உள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானாவின் ஹுசுராபாத்தையும் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியிடம் இருந்து பாஜக கைப்பற்றியது.

பீகாரில் குஷேஷ்வர் அஸ்தான் மற்றும் தாராபூர் ஆகிய இரு தொகுதி களையும் ஆளும் ஜேடியூ கட்சி தக்கவைத்துக் கொண்டது. சிவசேனா கட்சி தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி லோக்சபா தொகுதியை கைப்பற்றியது 

இதனிடையே, என்.பி.பி தலைமையிலான மேகாலயா ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸிடம் இருந்து ராஜபாலா மற்றும் மவ்ரிங்க்னெங் தொகுதிகளில் வெற்றி பெற்று 3 சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றியது.