ஏ.டி.எம். சேவைகள் பாதிக்க வாய்ப்பு... இரண்டு நாள் வங்கி ஊழியர்கள் நாடுதழுவிய போராட்டம்...

வங்கி ஊழியர்கள் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதால் ஏ.டி.எம். சேவைகள் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

ஏ.டி.எம். சேவைகள் பாதிக்க வாய்ப்பு... இரண்டு நாள் வங்கி ஊழியர்கள் நாடுதழுவிய போராட்டம்...

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது நடப்பு நிதி ஆண்டில் இரண்டு பொதுத் துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என தெரிவித்திருந்தார். வங்கி திருத்தம் சட்ட மசோதா அதற்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதால், இந்த மசோதாவை ரத்து செய்யவும், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

இந்நிலையில் வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு வங்கி தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.  நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர் நலன் கருதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என தங்களின் ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.  இந்திய தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உள்பட மூன்று வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இரண்டு வங்கி அதிகாரிகள் சங்கமும் இணைந்து  இந்த போராட்டத்தை நடத்துகின்றன.  

இதனால் இன்று முதல் இரண்டு நாட்கள் வங்கிகள் செயல்படாது. மேலும்  சனிக்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மட்டும் இன்று முதல் நான்கு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது. மற்ற மாநிலங்களில் வழக்கம்போல் சனிக்கிழமை வங்கிகள் செயல்படும்.  வேலைநிறுத்தம் காரணமாக பணப்பட்டுவாடா உள்பட வங்கிப் பணிகள் பாதிக்கப்படும். ஏடிஎம் சேவையும் பாதிக்கப்படக்கூடும் என கருதப்படுகிறது. இருப்பினும் மொபைல் மற்றும் இன்டர்நெட்டில் வங்கி செயல்பாடுகள் தடை இன்றி இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.