கோவாவில் ஆட்சி அமைக்க போவது யார்..? பெரும்பான்மை தொகுதிகளில் ஆளும் பாஜக முன்னிலை!!

கோவாவில் பெரும்பான்மை தொகுதிகளில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ள போதிலும், ஆட்சியமைப்பதற்கான நெம்பர் கிடைக்கவில்லை.

கோவாவில்  ஆட்சி அமைக்க போவது யார்..?  பெரும்பான்மை தொகுதிகளில் ஆளும் பாஜக முன்னிலை!!

40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு, கடந்த 14ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்ற காங்கிரஸ் கூட்டணி, பின்னர் பின்னடைவை சந்தித்தது. பிற்பகல் நிலவரப்படி, காங்கிரஸ் கூட்டணி 11 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 3 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 2 தொகுதிகளிலும் மற்றவை 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. ஆளும் பாரதிய ஜனதா கட்சி 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சங்கேலிம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பிரமோத் சவாந்த் வெற்றி பெற்றுள்ளார். 

பெரும்பான்மைக்கு 21 தொகுதிகள் தேவை என்பதால், சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்க 3 சுயேட்சைகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க பாஜக உரிமை கோரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக வேட்பாளரை எதிர்த்து  தனித்து  சுயேட்சையாக களம் இறங்கிய மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மனோகர் பாரக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் தோல்வியை தழுவியுள்ளார்.