மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறக்கக்கோரி தலைமைச் செயலகம் நோக்கி பேரணி!

மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறக்கக்கோரி தலைமைச் செயலகம் நோக்கி பேரணி!

ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியான புதுச்சேரியில் நியாய விலைக் கடைகளை திறக்கக் கோரி பேரணி நடைபெற்றது.

ரேஷன் கடைகளை திறக்கக் கோரிக்கை

புதுச்சேரியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளது.எனவே ரேஷன் கடைகளைத் திறக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று தலைமைச் செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த பெரியார் சிலையில் இருந்து கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட கட்சியினர் ஊர்வலமாக தலைமைச் செயலகம் நோக்கி சென்றனர். அப்போது நேரு வீதி-மிஷன் வீதி சந்திப்பில் போலீசார் தடுப்புகளை போட்டு பேரணியை தடுத்து நிறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து  ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் முதன்மைச் சாலையான நேரு வீதியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர் மேலும் தர்ணா நடைபெற்ற இடத்திற்கு வந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது ஆதரவை தெரிவித்துப் பேசினார். பின்னர் தலைமை செயலரை சந்திக்க அனுமதி அளிக்க கோரி தொடர்ந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் மனு அளித்தனர்

இதனையடுத்து முக்கிய நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில்,  தலைமைச் செயலாளரை சந்தித்து ரேஷன் கடைகளை திறக்க கோரிக்கை வைத்தனர். மேலும் அவர்களிடம் தலைமை செயலர் கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பிரதான சாலையான நேரு வீதியில் நடைபெற்ற தர்ணாவின் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக தர்ணாவில் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் ரேஷன் கடைகள் அனைத்தும் காட்சிப் பொருளாக மாறி உள்ளது என்றும் துணை நிலை ஆளுநர்,  சபாநாயகர் உள்ளிட்டவர்கள் முதல்வராக செயல்படுகின்றனர் எனவும் குற்றம்சாட்டினார். மேலும் ரேஷன் கடைகளை திறக்கும் போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தரும்  என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் பணத்திற்கு பதில் அரிசி வழங்க நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்தார்.

பாஜக அல்லாத மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸை சார்ந்தவர்களை ஆளுநர்களாக நியமித்து  சீர்குலைக்கக் கூடிய பணிகளை ஆளுநர்கள் செய்து கொண்டிருப்பதாக குற்றம்சாட்டிய ஜி.ராமகிருஷ்ணன், புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.