அதானி துறைமுகத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவா? கொதித்தெழுந்த கேரள மீனவர்கள்!

பல்நோக்கு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே ஏராளமான மீனவ மக்கள் தீவிர போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அதானி துறைமுகத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவா? கொதித்தெழுந்த கேரள மீனவர்கள்!

விழிஞம் துறைமுகப் பகுதியில் இன்று நூற்றுக்கணக்கான மீனவர்க,ள் முக்கியமாக அருகிலுள்ள கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் தங்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பான நீண்ட நாள் கோரிக்கைகளை முன்வைத்து கட்டுமானம் நடைபெற்று வரும் துறைமுகப் பகுதிக்குள் நுழைந்ததால் பதற்றம் நிலவுகிறது.

கட்டுமானப் பணியை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக முள்ளூரில் அமைந்துள்ள பல்நோக்கு துறைமுகத்தின் பிரதான நுழைவு வாயில் முன்பு ஏராளமான மீனவ மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல கோடி மதிப்பிலான திட்டம் தொடர்பாக கடலோர பாதிப்பு ஆய்வு. போராட்டத்தை தீவிரப்படுத்திய போராட்டக்காரர்கள் இன்று காலை பேரணியாக சென்று திட்ட வளாகத்திற்குள் நுழைந்து, அறிவியல்பூர்வமற்ற கட்டுமான நடவடிக்கைகளே இப்பகுதியில் கடலோர அரிப்பு அதிகரிப்பதற்கு காரணம் என அரசு மற்றும் துறைமுக அதிகாரிகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டக்காரர்கள் குழு ஒன்று தடுப்புகளை தகர்த்து துறைமுக தளத்திற்குள் நுழைந்தது, ஆனால் லத்தீன் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் மற்றும் காவல்துறையினர் அவர்களை அமைதிப்படுத்த முயன்றனர்.அவர்களை மீண்டும் நுழைவாயிலில் உள்ள போராட்ட இடத்திற்கு கொண்டு வந்தனர்.

அடிமலத்தூரா, பள்ளம் உள்ளிட்ட நான்கு கிராமங்களைச் சேர்ந்த மீனவ சமூகத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கம் மற்றும் லத்தீன் மறைமாவட்டப் பிரதிநிதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த நிலையிலும் மீனவர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். கடந்த ஆகஸ்ட்16 அன்று போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில், கடல் நீர் அரிப்பால் வீடுகளை இழந்த மீனவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு நிலம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கேரள அரசு தெரிவித்திருந்தது. மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் அரசு விருப்பம் தெரிவித்தது.

எவ்வாறாயினும், துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே நடைபெறும் போராட்டத்தை திரும்பப்பெற வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த சமரச முயற்சிகள் போதுமானதாக இல்லை. விழிஞம் துறைமுகத்தின் ஒரு பகுதியாக புளிமுட்டை என்ற இடத்தில் செயற்கையான கடல் சுவர்கள் கட்டமைக்கப்பட்டுள்ளதால், இம்மாவட்டத்தில் கடலோர அரிப்பு அதிகரித்து வருவதற்கு ஒரு காரணம் என போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

கேரள அரசுக்கும் அதானி துறைமுக நிறுவனத்திற்கும் இடையிலான ரூ.7525 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த அதானி துறைமுக விவகாரத்தால் கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.